தமிழகம்

புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ நீல கங்காதரன் காலமானார்

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ நீல கங்காதரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80.

புதுச்சேரி கோர்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் நீல கங்காதரன் (80). புதுச்சேரி தட்டாஞ்சாவடி விவிபி நகரில் குடியிருந்து வந்தார். புதுச்சேரியில் அரசு ஊழியராக பணியாற்றிய நீல கங்காதரன் பட்டியலின சமூக மக்களின் மேம்பாட்டுக்காக அம்பேத்கர் மக்கள் சங்கம் அமைத்து பல்வேறு பணிகளை செய்து வந்தார். பிறகு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இணைந்து கடந்த 2001-ம் ஆண்டு ஏம்பலம் தொகுதியில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி மக்கள் பணிகளை செய்தார். முன்னாள் எம்எல்ஏவான அவர், தற்போது புதுச்சேரி மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த, நீல கங்காதரன் சிகிச்சைப் பலனின்றி இன்று (அக்.12) உயிரிழந்தார். அவருக்கு காந்திமதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவரது இறுதிச்சடங்கு கோர்க்காடு பகுதியில் வரும் திங்கள்கிழமை (அக்.14) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT