நாகர்கோவில்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பாஜகவில் இணைய திட்டமிட்டிருப்பதாக ஆதாரத்துடன் புகார்கள் சென்றதால், அதிமுக கட்சி தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை வழிநடத்தும் முக்கிய பொறுப்புகளை கடந்த 20 ஆண்டுகளாகவே தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வகித்து வந்தார்.
சமீப காலமாக அவர், இந்து கோயில்கள், அமைப்புகள் மற்றும் இந்து சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வந்தார். குறிப்பாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தளவாய் சுந்தரத்தின் பெயர் முதன்மையாக இருக்கும். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெறும் ஆரத்தி வழிபாடு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். விவேகானந்தா கேந்திராவுக்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் வரும்போது, அவர்களை சந்தித்து பேசுவது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில், தளவாய் சுந்தரம் வகுத்து வந்த அமைப்புச் செயலாளர், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து அவரை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தளவாய் சுந்தரத்தை அதிமுகவின் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கியதற்கு, பாஜகவினருடன் அவர் கொண்டிருந்த நெருக்கமே காரணம் எனக் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மக்களவைத் தேர்தல், விளவங்கோடு சட்டப்பேரவை தேர்தலில் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட் இழந்தது. இத்தேர்தலில் அதிமுக பொறுப்பாளராக இருந்த தளவாய் சுந்தரம், தேர்தல் பணியில் பாஜகவுக்கு சாதகமாக இருந்ததாக அப்போதே கட்சியினர் குற்றம்சாட்டினர். கடந்த 6-ம் தேதி குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக கட்சி தலைமைக்கு புகார் சென்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவினர் கூறியதாவது: கோயில் நிகழ்ச்சிகளில் அனைத்து கட்சியினரும் பங்கேற்பது இயல்பு தான். ஆனால் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகளவில் தளவாய் சுந்தரம் பங்கேற்று வருகிறார். ஏற்கெனவே பாஜக, அதிமுக இடையே கருத்து மோதல் உள்ளது. அதிமுகவை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவர்களது நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் பங்கேற்பதில்லை. ஆனால் அதை தளவாய் சுந்தரம் மீறுவது கட்சி தலைமைக்கு புகாராக சென்றுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றபோது மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோ ருடன் இணக்கமாக இருந்து பாஜக நிர்வாகியைப் போன்று தளவாய் சுந்தரம் செயல்பட்டார். சுரேஷ்கோபியிடம் பாஜகவில் பொறுப்புகள் பெறுவது குறித்தும் அவர் பேசியதாக தகவல் பரவியது என்றனர்.
இதுகுறித்து கருத்து கேட்க தளவாய் சுந்தரத்தை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர், போன் அழைப்பை நிராகரித்தார். தளவாய் சுந்தரத்திடம் பறிக்கப்பட்ட பொறுப்புகளை பெறுவதற்கு சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை சந்திக்க, கன்னியாகுமரி மாவட்டதைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். பாஜக மூத்த நிர்வாகிகள் எச்.ராஜா, எம்ஆர் காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர், தளவாய் சுந்தரம் பாஜக வந்தால் வரவேற்போம் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.