புதுக்கோட்டை மாநகராட்சி தொடக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர். 
தமிழகம்

“வட கிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ளத் தயார்” - அமைச்சர் கே.என்.நேரு 

கே.சுரேஷ்

புதுக்கோட்டை: “வடகிழக்குப் பருவமழையின்போது எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார்,” என தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

புதுக்கோட்டை நகராட்சியானது மாநகராட்சியாக மாற்றப்பட்டு, முதல் மாமன்றக் கூட்டத்தின் தொடக்க விழா, மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (அக்.9) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எம்.அருணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் மாநகராட்சி நடவடிக்கைகளை தொடங்கி வைத்தனர். விழாவில், மேயர் திலகவதி செந்திலுக்கு செங்கோல் வழங்கியும், பேருந்து நிலையக் கட்டுமானப் பணி, 7 வார்டுகளில் புதைசாக்கடைத் திட்டம், 5 வார்டுகளில் குடிநீர் விநியோகத்துக்கான பணி உள்ளிட்ட ரூ.145.55 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கூட்டம் நடத்தி ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். தமிழகத்தின் அனைத்து நகர் பகுதிகளிலும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. எத்தகைய பாதிப்புகளையும் எதிர்கொள்ள நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

அதேபோல, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்களை தங்கவைப்பதற்கான இடங்கள், மரங்களை அப்புறப்படுத்துதல், நீர்நிலைகளின் உடைப்புகளை சரி செய்தல் உள்ளிட்டவைக்குத் தேவையான கருவிகள், இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார். ஒரே நேரத்தில் வரியை உயர்த்தி சுமையை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே ஆண்டுதோறும் வரி உயர்த்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களை வரி உயர்வு பாதிக்காது. தேர்தல் வரவுள்ளதால் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நகராட்சி நிர்வாகத் துறையில் 2,600 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன,” என்று அவர் கூறினார்.

இவ்விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வை.முத்துராஜா (புதுக்கோட்டை), எம்.சின்னதுரை (கந்தர்வக்கோட்டை), நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தானமூர்த்தி, துணை மேயர் எம்.லியாகத் அலி, ஆணையர் த.நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, மாநகராட்சியோடு 11 கிராமங்களை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து, நகராட்சி அலுவலகம் வரை வந்தனர். பிறகு அவர்கள் மாமன்றக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறிவிட்டு திரும்பிச் சென்றனர்.

SCROLL FOR NEXT