தமிழகம்

அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள்: கடலூர், சிதம்பரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

க.ரமேஷ்

கடலூர்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளையொட்டி பாமக சார்பில் கடலூர், சிதம்பரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை கடலூர் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் கடலூர் அருகே உள்ள நாணல்மேடு கிராமம், குறிஞ்சிப்பாடி தொகுதி மணக்குப்பம் கிராமம் ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட பாமக செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான சண்.முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முகாமை பாமக சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார்.

மாவட்ட தலைவர் தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்று நடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதுபோல கடலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கடலூர் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் செல்வ மகேஷ் தலைமை தாங்கினார். மாநில வன்னியர் சங்க தலைவர் புதா. அருள்மொழி, நிர்வாகிகள் தேவதாஸ் படையாண்டவர், சஞ்சிவி, முன்னாள் நகர தலைவர் அருள், பசுமை தாயகம் மாநிலத் துணைத் தலைவர் அழகரசன் உள்ளிட்ட பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

டாக்டர் அன்புச் சோழன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், பல் மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முன்னதாக சிதம்பரம் காந்தி சிலை பகுதியில் பாமகவினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நடராஜர் கோயிலில் சிறப்புப் படையலும் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT