தமிழகம்

சேத்துப்பட்டு மலையாளி கிளப்பில் புதிய கட்டிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக வழக்கு: மாநகராட்சி ஆய்வு செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் எந்த அனுமதியும் பெறாமல் புதிதாக 12 ஆயிரம் சதுர அடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அயனாவரம் கே.எம்.ஆனந்த் ஜோஷி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ``சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் உறுப்பினராக உள்ளேன். கிளப் நிர்வாகம்,கிளப்பின் ஒரு பகுதியை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது.

எந்தவொரு அனுமதி பெறாமலும், கட்டிடத்தின் அஸ்திவாரத்தை சோதிக்காமலும் 12 ஆயிரம் சதுர அடி கொண்ட 4-வது தளம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால்அதற்கு கிளப் நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே பொறுப்பேற்க வேண்டும்.

இந்த கிளப் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது என்பதால் கிளப் நிர்வாகத்தின் வரவுசெலவு கணக்கு விவரங்களை முறையாகதணிக்கை செய்ய வேண்டும். செலவினங்களுக்கு பொதுக்குழுவில் அனுமதி பெற வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் தனியாருக்கு குத்தகை விடுவது, புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டுவது போன்ற அத்துமீறல்களில் கிளப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், தீயணைப்புத் துறை மற்றும் தமிழக டிஜிபி உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.அஸ்வினிதேவி, ``மனுதாரர் அளித்துள்ள மனுவை பரிசீலித்து 4 வாரத்துக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கிளப்உள்ள கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, முறையான அனுமதியுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்வர்'' என்றார்.

அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ``மனுதாரரின் புகார் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT