சென்னை: சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளிலுள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளில் எடுக்கப்பட வேண்டிய பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அமைச்சர் எ.வ.வேலு நேற்று, கிண்டி, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: பல்லாவரம்-துரைப்பாக்கம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலையும் இணைக்கும் சாலைகளில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மறைமலை அடிகளார் பாலம், இரும்புலியூர் -வண்டலூர், முடிச்சூர்-வாலாஜபாத் சாலை மழைநீர்வடிகால்வாய் அமைக்கும் பணிகளில் முடிக்கப்படாதவற்றை ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க வேண்டும். சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களில் 4 பக்கமும் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
வெள்ள சேத தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் மணல் மூட்டைகள், சவுக்கு கம்பங்கள் உள்ளிட்ட பொருட்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
துறையிலுள்ள பணியாட்கள் தவிர தேவைப்படும் இதர ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.இயற்கை பேரிடர் காலங்களில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும். அவசர காலங்களுக்கு உதவும் ஒப்பந்ததாரர்களை கண்டறிந்து அவர்களின் தொலைப்பேசி எண்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.சேதம் பற்றிய விவரங்களைஉடனடியாக தலைமையிடத் துக்கு தெரிவிக்க வேண்டும்.
தாம்பரம் -சோமங்கலம் -நந்தம்பாக்கம் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நெடுஞ்சாலைத்துறை செயலர் ஆர்.செல்வராஜ், முதன்மை இயக்குநர் ஆர்.செல்வதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.