சென்னை: ஆவின் ஐஸ்கிரீம் வகைகளின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் 100-க்கும் மேற்பட்ட வகைகளில் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்து, தமிழகம்முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆவின் ஐஸ்கிரீம் வகைகளின் விற்பனை விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்தவிலை உயர்வு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
50 மி.லி. வெண்ணிலா, மேங்கோ, ஸ்டாபெர்ரி வகைகள் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும், சாக்லேட், பிஸ்தா வகைகள் ரூ.12-ல் இருந்து ரூ.18 ஆகவும் உயர்ந்துள்ளது. 65 மி.லி. சாக்கோ பார் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், சாக்கோ பீஸ்ட் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது. 70 மி.லி. குல்பி பார் ரூ.30-ல் இருந்து ரூ.40ஆகவும், 100 மி.லி. கிளாசிக் கோன் ரூ.35-ல் இருந்து ரூ.45 ஆகவும் உயர்ந்துள்ளது.
100 மி.லி. வெண்ணிலா, மேங்கோ, ஸ்டாபெர்ரி வகைகள் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும், சாக்லேட், பிஸ்தா, பாதாம், பட்டர் ஸ்காட்ச் வகைகள் ரூ.22-ல் இருந்து ரூ.30 ஆகவும், ட்ரை புருட்ஸ் ரூ.25-ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 125 மி.லி. பால் ஐஸ் கிரீம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், கசட்டா ரூ.45-ல் இருந்து ரூ.65 ஆகவும், லவ்லி லிட்சி, ஸ்டாபெர்ரி, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் வகைகள் ரூ.40-ல் இருந்து ரூ.60 ஆகவும், ப்ளாக் கரண்ட் ப்ளாஸ்ட், சாக்லேட் மேனியா வகைகள் ரூ.45-ல் இருந்து ரூ.60 ஆகவும், பிஸ்தா பேஷன் ரூ.55-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதவிர, 1000 மி.லி. வெண்ணிலா, மேங்கோ, பட்டர் ஸ்காட்ச் ரூ.150-ல் இருந்து ரூ. 220 ஆகவும், சாக்லேட் ரூ.170-ல் இருந்து ரூ.250 ஆகவும், பிஸ்தா ரூ.175-ல் இருந்து ரூ.250 ஆகவும், பாதாம், பட்டர் ஸ்காட்ச் ரூ.180-ல் இருந்து ரூ.250 ஆகவும் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, 250 மி.லி., 500 மி.லி. ஐஸ்கிரீம் வகைகள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பால் முகவர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கூறியதாவது: பால் கொள்முதல் விலை உயர்வு இல்லாத இந்த தருணத்தில், ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேநேரம், பால் கொள்முதல் விலை உயர்வை அரசு அறிவிக்கும்போது, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் சார்ந்த அனைத்து வகையான பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்துவது தான் சரியான நடைமுறையாக இருக்க முடியும். திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பயன்படும் வகையிலான 4,500 மி.லி. பல்க் ஐஸ்கிரீம் வகைகள் ரூ.80 முதல் ரூ.100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.