தமிழகம்

‘இந்துக்கள் மட்டுமே கைது; தமிழக அரசு பாரபட்சம்’ - இந்து முன்னணி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: இஸ்லாம் மதத்தை விமர்சித்ததாக இந்துக்களை கைது செய்யும் காவல் துறை, இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாரபட்சமாக செயல்படுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் காதர் பேட்டை வியாபாரி சுந்தரம் என்பவர் இஸ்லாம் மதத்தை பற்றிய விமர்சனத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என்பதாக குற்றம் சாட்டி வழக்கு போட்டு கைது செய்துள்ளது தமிழக காவல் துறை.

கைது பட்டியல்: கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற எத்தனை கைது நடவடிக்கைகளை காவல்துறை எடுத்துள்ளது என்பதை பட்டியலிட முடியும். அதே சமயம் இந்து கடவுளை, இந்து சமயத்தை, இந்துக்களை, நமது நாட்டை, சுதந்திரத்தை கேவலப்படுத்தி, நமது சுதந்திர போராட்ட வீரர்களை இழிவுபடுத்தி பொது இடத்தில் பேசியவர்கள் மீதும், முகநூலில் பதிவிட்டவர்கள் மீதும் இதே காவல்துறையிடம் பல புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வன்முறை ஏற்படும் என்பதால் நட வடிக்கை இல்லை என இந்துக்கள் புரிந்து கொண்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்னவாகும்? தமிழக அரசின் பாரபட்சம் இதில் அப்பட்டமாக தெரிகிறது. தமிழகத்தில் காவல்துறையை ஏவல் துறையாக ஆளுங்கட்சி பயன்படுத்தி காவல்துறையின் மூளையை கெடுத்து அடிமைகளாக நடத்தி வருகிறது என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.

வங்கதேசத்தினர் ஊடுருவல்: அதன் காரணமாக தமிழகத்தில் போதைப் பொருள், வங்கதேசத்தினர் ஊடுருவல், நக்சல், இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் பகிரங்கமாக தலைதூக்கி வருகிறது. தமிழக முதல்வர் தனது கட்டுப்பாட்டில் அரசு இயந்தி ரத்தை வைத்து நிர்வகிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. எனவே தமிழக அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதையும், இந்துக்களை மட்டும் கைது செய்து வழக்கு போட்டு மிரட்டும் பாசிச போக்கையும் கைவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT