மதுரை: வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கெனவே நீர் நிலைகளை அழித்துவிட்டோம். எனவே, நீர்நிலைகளில் தொழிற்பேட்டை அமைக்க அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேட்டைக்காரன்வலசு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், கோதயம் வாஞ்சிமுத்து ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோதயத்தில் உள்ள அரசிகுத்துக் குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்குமாறு திண்டுக்கல் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், அந்த நீர்நிலையில் டான்சிட்கோ சார்பில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்க ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர், கோதயம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஜூன் 12-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நீர் நிலையில் தொழிற்பேட்டை அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, தொழிற்பேட்டை அமைக்கும் அறிவிப்பை ரத்து செய்து, நீர்நிலையை மீட்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்றம் நியமனம் செய்த வழக்கறிஞர் ஆணையர்சண்முகராஜா, கோதயத்தில் ஆய்வு நடத்தி, ஓடை இருப்பதை உறுதி செய்துள்ளார். ஆனால், இதற்கு ஆட்சியர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் சர்வே அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கோதயத்தில் அரசுவழக்கறிஞர், வழக்கறிஞர் ஆணையர், மனுதாரரின் வழக்கறிஞர் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வுநடத்தினார். இதில், அங்கு நீர்ப்பாசனத் தேவைக்கான கட்டமைப்புகள், விளை நிலங்கள் இருந்ததுதெரியவந்தது. மேலும், பொதுப்பணித் துறை வலைதளத்தில் இந்தப் பகுதியை நீர் நிலை எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கோதயத்தில் குளம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் தாக்கல் செய்த பதில் மனு மற்றும் ஆட்சேபனைகள் அதிருப்தி அளிக்கின்றன. நீதிமன்றத்துக்கு அதிகாரிகள் பதில் அளிக்கும்போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நீர்நிலையை தொழில் பயன்பாட்டுக்காக மாற்ற முடியாது.
ஏற்கெனவே, வளர்ச்சி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நீர் நிலைகளை அழித்துள்ளோம். நீர்நிலைகள் பயன்பாட்டில் இல்லாமல் போனாலும், அவற்றை மீட்டெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
நீ்ர் நிலையை தொழிற்பேட்டையாக மாற்றுவதை அரசியலமைப்புச் சட்டப்படி அனுமதிக்க முடியாது. நீர் நிலையை மீட்க மனுதாரர் பால்ராஜ் அளித்த மனுவை நிராகரித்து ஆட்சியர் பிறப்பித்தஉத்தரவு மற்றும் டான்சிட் தொழிற்பேட்டை அறிவிப்பு ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.