தமிழகம்

சென்னை புறநகர் பகுதிகளில் விதிகளை மீறி ‘பறக்கும்’ லாரிகள்: தொடர் விபத்துகளால் மக்கள் அச்சம்

செய்திப்பிரிவு

புறநகர் பகுதிகளில் விதிகளை மீறி லாரிகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அப்படிப் பட்ட லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், திருநீர்மலை, திரிசூலம், அனகாபுத்தூர் பகுதிகளில் கல் குவாரிகள் உள்ளன. மேடவாக்கத் தில் மொத்த செங்கல் வியாபாரம் நடக்கிறது. புறநகர் பகுதிகளில் தற்போது கட்டுமானப் பணிகள் அதிக அளவில் நடப்பதால் மணல், சிமென்ட், ஜல்லி உள்ளிட்டவை கள் ஏற்றி வரப்படுகின்றன. இதற்காக புறநகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதற்காக காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட சாலைகளில் லாரிகள் செல்ல போக்குவரத்து போலீஸார் தடை விதித்துள்ளனர். குறிப்பாக, வேளச் சேரி - மேடவாக்கம் கூட்ரோடு, முடிச்சூர் - தாம்பரம் சாலை, துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலை, மதுரவாயல் - இரும்புலியூர் சாலை, பெரும்பாக்கம் சாலை, வேளச்சேரி - எம்.ஆர்.டி.எஸ். சாலை, ‘சிட்டி லிங்க்’ சாலை உள்ளிட்ட சாலைகளில் காலை 8 முதல் 11 மணி வரையிலும், மாலை 4 முதல் 8 மணி வரையிலும் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தடையை பின்பற்றாமல் ஏராளமான லாரிகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் மணல், பெரிய கற்கள், ஜல்லிகள் கொண்டுசெல்லும் லாரிகளில் தார்ப்பாய் போட்டு சரியாக மூடிச் செல்வதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தாம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் 10-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார். அவரது தம்பி, தலையில் பலத்த காயம் அடைந்தார். விதிமுறைகளை மீறி நெரிசலான நேரங்களில் லாரிகளை இயக்குவதால்தான் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. எனவே, விதிகளை மீறி இயக்கப்படும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜிடம் கேட்டபோது, ‘‘ஜல்லி உள்ளிட்ட ஒரு சில பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி டிரைவர்களுக்கு ‘டிரிப்’ அடிப்படையில் சம்பளம் தரப்படுகிறது. இதனால், அதிக ‘டிரிப்’ அடிக்க வேண்டும் என்ற ஆசையில் சில டிரைவர்கள் வேகமாக செல்கின்றனர். எனவே, டிரிப் அடிப்படையில் சம்பளம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என லாரி உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளோம். மேலும், லாரிகளில் ஓவர்லோடு ஏற்றிச் செல்வதை நிறுத்தக் கோரியும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். அந்தந்த எல்லைக்கு உட்பட போக்குவரத்து போலீஸார், 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி, லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘விபத்து நடக்கும் பகுதியில் இருபுறமும் வேகத் தடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மெதுவாக செல்லுமாறு லாரி டிரைவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டு வருகிறது. விழிப்புணர்வு கூட்டங்களை அதிகப்படுத்த உள் ளோம். லாரிகளின் வேகம் குறித்து அடிக்கடி சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விதி களை மீறும் லாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT