காஞ்சிபுரத்தில் உள்ள காவல் துறைக்கு சொந்தமான வஜ்ரா வாகனம் சரியாகச் செயல்படு கிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. சென்னை எண்ணூரில் இருந்து தூத்துக்குடிக்கு பூமிக்கு அடியில் ஐஓசி சார்பில் எரிவாயு எடுத்துச் செல்ல குழாய் பதிக்கப்பட உள்ளது. அதற்காக உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதற்காக விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை-சேலம் இடையே பசுமைச் சாலை அமைப்பதற்காகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இந்த 2 திட்டங்களுக்கும் தற்போது விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
இந்தத் திட்டங்களை செயல்படுத்த முனையும்போது விவசாய நிலங்களைக் கையகப்படுத்த வேண்டி இருக்கும். அப்போது விவசாயிகள் போராட்டம் தீவிரமடையலாம் என்ற கருத்து போலீஸார் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டால் கட்டுப்படுத்த பயன்படுத்தும் வஜ்ரா வாகனம் பழுதடைந்த நிலையில் உள்ளதாக போலீஸார் தெரிவித் தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த வாகனத்தின் நிலை குறித்து உரிய பிரிவு அலுவலர்களுடன் சென்று மாவட்ட காவல் கண் காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி ஆய்வு செய்தார். வாகனத்தின் பழுதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.