தமிழகம்

“தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும்” - மாணிக்கம் தாகூர் எம்.பி.

இ.மணிகண்டன்

விருதுநகர்: “தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும்” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (அக்.2) விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, காமராஜர் இல்லத்திற்குச் சென்று காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்பு அவர் அளித்த பேட்டியில், “காந்தியின் உண்மைத் தொண்டனாக வாழ்ந்தவர் காமராஜர். அதனால் பெருந்தலைவராக ஆனார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி முறைகேடாக செயல்பட்டார் என அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; இது பாஜகவின் சதி. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். மத்திய அரசு முழுமையாக சட்டவிரோத பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் அரசாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்தில் மது இல்லை. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத நிலை வரும். மது ஒழிப்பு என்பது ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டரின் குறிக்கோள். ஆனால் அரசியல் பலம் என்பது வேறு, கொள்கை ஈடுபாடு என்பது வேறு. மக்கள் எப்போது எங்களை புரிந்துகொள்கிறார்களோ அப்போது காங்கிரஸ் கட்சி மீண்டும் இக்கொள்கையை கொண்டுவரும் சாத்தியக் கூறுகள் உள்ளன.

போதைப் பொருட்களும் கள்ளச் சாராயமும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளன. போதைப் பொருள்களையும் கள்ளச் சாராயத்தையும் ஒழிக்க எந்த அரசு நடவடிக்கை எடுக்கிறதோ அந்த அரசோடு காங்கிரஸ் கட்சி உடன் இருக்கும். தென் தமிழகத்தை பாஜக வஞ்சிக்கிறது. மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்திற்கு உரிய நிதி அளிக்காமல் குறைவான நிதியை ஒதுக்கீடு செய்கிறது. மத்திய அரசு. இந்த நிலையை மாற்ற வேண்டும். மதுரை - தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை விரைவில் நிறைவேற்ற பாராளுமன்றத்தில் வலியுறுத்துவோம்.

நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி ஒதுக்குகிறார்கள். காரணம், சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்காகத்தான். கல்விக்கோ மற்ற திட்டங்களுக்கோ உரிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை. சிலிண்டர் விலை உயர்வால் சாமானிய மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழக மக்கள் இதை அறிந்தவர்கள். அதனால் தான் அவர்களுக்கு தமிழகத்தில் ஒரு சீட்டு கூட கிடைக்கவில்லை.” என்று கூறினார்.

இந்தப்பேட்டியின் போது, சிவகாசி எம்எல்ஏ அசோகன், காங்கிரஸ் நகரத் தலைவர் நாகேந்திரன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT