மதுரை: நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அவரது ரசிகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது அவர்கள் பெண்களுக்கு மாங்கல்ய பிரசாதம் வழங்கினர்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் செப்.30-ம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரஜினிகாந்த் பூரண குணமடைய வேண்டும் என மதுரையில் அவரது ரசிகர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் லதா ரஜினிகாந்தின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக அம்மன் சன்னிதி முன்பாக மாங்கல்ய பிரசாதம், வளையல், குங்குமம் உள்ளிட்டவற்றை 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கினர்.
மதுரை மாநகர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் பி.அழகர்சாமி மற்றும் பால.நமச்சிவாயம், அவனி பாலா ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி குமாரவேல் பெண்களுக்கு மாங்கல்யம் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ரஜினி இன்பா, ரவிச்சந்திரன், அண்ணாதுரை, ரஜினி பாண்டி, எல்லீஸ் கார்த்திக், விக்கி ஜெயமணி, முருகவேல், மாதவன் லிங்கா மணி, செல்வா உள்ளிட்ட ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.