சென்னை: அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 10 வயதுசிறுமியின் வாக்குமூல ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை தண்ணீர்கேன் சப்ளை செய்யும் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது சம்பந்தப்பட்ட இளைஞரின் பெயரை புகாரில் இருந்து நீக்கக்கோரி காவல் ஆய்வாளர் ராஜி உள்ளிட்ட போலீஸார் அவர்களை தரக்குறைவாக பேசி தாக்கியதாக சிறுமியின் பெற்றோர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங் களில் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாகமுன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது. அதேபோல, தனது மகளுக்கும், தங்களுக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சிறுமியின் தாயாரும் தனியாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூல ஆடியோ வெளியானது தொடர்பாக யூடியூபரான மாரிதாஸ் மற்றும்ஆங்கில நாளிதழின் பத்திரிகையா ளர் மீது வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றது யார் என்றும், எங்கு வைத்து சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர், பெண் காவல் ஆய்வாளர் தனது மொபைலில் மருத்துவமனையில் வைத்துவாக்குமூலத்தைப் பதிவு செய்துள் ளார். உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனையில் வாக்குமூலம் பெறப்பட்டது என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பெண் காவல் ஆய்வாளரான ராஜி மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், அந்தஆடியோ எங்கிருந்து வெளியானது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவி்க்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், போக்சோ போன்ற தீவிரமான குற்றச்சாட்டு வழக்குகளை விசாரிக்கும் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும். வழக்கு விசாரணையை உயரதிகாரிகளும் மேற்பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை சட்டரீதியாக பாதுகாக்க வேண்டும் என கருத்து தெரிவித்து, ‘இந்த வழக்கில் போக்சோ விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
புகார் கொடுக்க வந்த பெற்றோரை போலீஸார் தாக்க வேண்டிய அவசியம் என்ன? வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்தது ஏன்? மருத்துவமனை லிப்ட் அருகே வைத்து சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தது ஏன்?’ என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இந்த வழக்கில் காவல்துறை விசாரணை மீது சிறுமியின் பெற்றோரே நம்பிக்கை இழந்துவிட்டனர். அதற்கு உரிய காரணம் இருப்பதாக நாங்களும் நம்புகிறோம். எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுகிறோம். அதேபோல சிறுமிக்கும், பெற்றோருக் கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் கூடுதல் இழப்பீடு பெற சிறுமியின் பெற்றோர் உரிய நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம் என உத்தரவிட்டுள்ளனர்.