வேலூர்: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உதயநிதியை துணை முதல்வராக்கியதில் எந்த தவறும் இல்லை” என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலங்கள் அமைப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது, கல்வி, தொழில், விவசாய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட குழு சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (அக்.1) தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஜி.லதா தலைமை தாங்கினார். மாநில துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில் முத்தரசன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய சுமார் 50 கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளும் அடங்கியுள்ளன. இவற்றை மாவட்ட நிர்வாகமும், அரசும் நிறைவேற்றிட வேண்டும். பல்வேறு வரிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு வரியை உயர்த்த வேண்டும் என்ற மத்திய அரசின் நிர்பந்தமும், நெருக்கடியுமே அடிப்படை காரணமாகும். மத்திய அரசு நெருக்கடி கொடுத்தாலும் அதனை ஏற்காமல் தமிழக அரசு வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திருப்பதி லட்டு விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று சந்திரபாபு நாயுடுவை உச்சநீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. இதேபோல், பழனி பஞ்சாமிர்தம் குறித்தும் அவதூறு பரப்பியவருக்கு உயர்நீதிமன்றம் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டுள்ளது. கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சினையால் மக்கள் அவதிப்படும் நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இத்தைய அவதூறுகளை வகுப்புவாத சக்திகளும், அவர்களுக்கு துணைபோகக்கூடியவர்களும் மேற்கொண்டுள்ளனர்.
கடவுள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு மக்கள் இறையாகக்கூடாது. நிர்மலா சீதாராமன் தனது நிதியமைச்சர் பதவியை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு நிதி திரட்டியது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜெ.பி.நட்டாவுக்கும் தொடர்புள்ளது. நேர்மையான அரசியல்வாதிகள் என்றால் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா இருவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் மூலம் தன்னிச்சை அதிகாரம் கொண்ட அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அரசியல் சாசன அமைப்புகளை பாஜக தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டிருப்பதும் உறுதியாகி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் வாங்கியதாகவும், கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கை தனிநீதிபதி வைத்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டியது நீதிமன்றமே தவிர வெளியில் இருப்பவர்கள் அல்ல. எனவே, நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டப்பேரவை கூடித்தான் முதல்வராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்துள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு யார் யாரை அமைச்சராக்க வேண்டும் என்பதில் அதிகாரம் உள்ளது. அந்த வகையில், முதல்வர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உதயநிதியை துணை முதல்வராக்கியதில் எந்த தவறும் இல்லை’’ என்றார்.