தமிழகம்

பரந்தூர் விமான நிலையத்துக்காக ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த 3-வது கட்ட அறிவிப்பு: ஆட்சேப மனு அளிக்க பொதுமக்கள் முடிவு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 5,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில் ஏகனாபுரம் கிராமம் முழுவதுமாக கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் 798 நாட்களை கடந்துள்ளது.

இந்த கிராமத்தில் முதல்கட்டமாக 230 ஏக்கர் நிலமும், 2-வது கட்டமாக 150 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அப்போது அந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு கட்ட அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நிலம் எடுப்பு அலுவலகத்தில் ஆட்சேப மனுக்களை அளித்துள்ளனர்.

இவ்வாறு தொடர் போராட்டம் நடைபெறும் நிலையில் ஏகனாபுரம் கிராமத்தில் 58 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக ஆட்சேப மனுக்கள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ கூறும்போது, “ஒரு வாரத்தில் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து நிலம் எடுப்பு அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT