கோவில்பட்டி: உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் திமுகவில் வாரிசு அரசியல் நடப்பது நிரூபணமாகி விட்டது என்று அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு கூறினார்.
கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் டெல்லியில் பிரதமரை 45 நிமிடம் சந்தித்தபோது முதல் அரை மணி நேரம்மாநிலத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசியதாக வெளிப்படையாக கூறியுள்ளனர். ஆனால், கடைசி 15 நிமிடங்கள் தலைமை செயலாளர் உள்ளிடோரை அனுப்பிவிட்டு, முதல்வர், எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் மட்டும் பிரதமரிடம் பேசியுள்ளனர் என்றால், அது அரசியல் சம்பந்தமாகத் தான் இருக்கும்.
பதில் அளிக்க வேண்டும்: அமைச்சரவையில் இருந்து ஒரு அமைச்சர் விடுவிக்கப்படுகிறார் என்றால், அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு இருக்க வேண்டும். இல்லையென்றால் துறை ரீதியாக ஒரு பிரச்சினையை அவர் எதிர் கொண்ட நேரத்தில் அவர் விடுவிக்கப்படுவது இயல்பு. ஆனால் அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் விடுக்கப்பட்டதன் மர்மத்துக்கு முதல்வர் தான் பதில் அளிக்க வேண்டும்.
வாரிசு அரசியல் நிரூபணம்: ஸ்டாலினால் திமுகவையும் காப்பாற்ற முடியவில்லை, ஆட்சியையும் கொண்டு செல்ல முடியவில்லை என்பதை தான் உதயநிதியின் நியமனம் காட்டுகிறது. இதன்மூலம் திமுகவில் வாரிசு அரசியல்நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இது ஏற்றுக்கொள்ளக் கூடிய அம்சமாக இருக்காது என்பது எங்கள் கருத்து. இந்த அரசுமக்கள் விரோத அரசாக உள்ளது.
அதிமுகவில் இருந்து யாரும்பிரிந்து செல்லவில்லை. கமல்ஹாசன் திமுகவுக்கு துதி பாடும் வேலையை செய்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியை திமுகவுடன் இணைத்து விட்டாரோ என்று எண்ணும் நிலையில் தான் அவரது அரசியல் பயணம் இருக்கிறது. மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக அவர் இப்படி தரம் தாழ்ந்து போகக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.