தமிழகம்

பேருந்துகளில் விளம்பரம் இருந்ததால் ஓட்டுநருக்கு அபராதம்: அமைச்சருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம்

செ.ஆனந்த விநாயகம்

சென்னை:பேருந்தில் அனுமதி வழங்கப்பட்ட விளம்பரம் இடம்பெற்ற நிலையில், ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தக்க அறிவுறுத்தல் வழங்கக் கோரி போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் ஓட்டுநர் தன்னிச்சையாக விளம்பரம் செய்ய முடியாது. பல்வேறு அலுவலக நடைமுறைக்கு உட்பட்டு தான் சினிமா உள்ளிட்ட விளம்பரங்களை நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இதேபோல், ஒலிப்பான் பயன்படுத்த தடை விதிக்கப்படாத பகுதியிலும் ஒலிப்பான் பயன்படுத்தியதாகக் கூறி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அபராதம் விதிக்கின்றனர். அண்மையில் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட புறநகர் கிளை பேருந்தின் ஓட்டுநருக்கு மேற்கூறிய காரணத்தை குறிப்பிட்டு, ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுக்கு ஓட்டுநரை முழு பொறுப்பாக்குவதை ஏற்க முடியாது.

இந்த விவகாரத்தில் தலையிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT