ரெட்டேரி உள்பட சில பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.  
தமிழகம்

ரெட்டேரி பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடக்கம் 

எம். வேல்சங்கர்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ள ரெட்டேரி உள்பட சில பகுதிகளில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு, 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5 வது வழித்தடம் (44.6 கி.மீ.) இந்த வழித்தடத்தில் ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், , கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக அமைகிறது. இந்த தடத்தில், பெரும்பாலும் மேம்பால பாதை வழியாக அமைவதால், பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே, பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 250-க்கும் மேற்பட்ட தூண்களில் மேம்பாலம் அமைத்துள்ளனர். பணிகள் முடிந்துள்ள கொளத்தூர், ரெட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளன.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: “மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 44.6 கி.மீ., தூரத்தில் பெரும்பாலான மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைகிறது. இந்த பணிகள் தாமதம் இன்றி முழுவீச்சில் நடைபெற்று வருகன்றன. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண்களில் ரெட்டேரி, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இதில், ரயில் பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் மொத்தமாக இதுவரையில் 40 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இருப்பினும், கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே 50 சதவீதத்துக்கும் மேல் பணிகள் முடிந்துள்ளன. இத்தடத்தில் 2026-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். பட்ரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் தற்போது தான் பணிகள் தொடங்கி உள்ளது. இத்தடத்தில் அனைத்து பணிகளும் 2027-ம் ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT