தமிழகம்

பிரசவித்த பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாறுதல்: டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி

அ.அருள்தாசன்

திருநெல்வேலி: தமிழக முதல்வர் உத்தரவுப்படி சமீபத்தில் குழந்தை பெற்ற பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாறுதல் அளிக்கப்படும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தென்மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று டிஜிபி சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று 2-வது நாளாக திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து காவலர்களின் குறை தீர்க்கும் நிகழ்ச்சி அங்கு நடைபெற்றது. காவலர்களின் விருப்ப பணியிட மாற்றம் கோரிய மனுக்களை காவல்துறை உயர் அதிகாரிகள் சேகரித்து டி.ஜி.பி.யிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை ஆய்வு செய்தபின் அவர் பேசியது: ''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் சமீபத்தில் குழந்தை பெற்ற பெண் காவலர்கள், விருப்ப மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களது மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அடுத்தபடியாக கணவன், மனைவி ஒரே இடத்தில் வேலை செய்யும் நிலையிலுள்ள காவலர்கள் விருப்பம் மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தால் முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும். மற்ற காவலர்களுக்கு காத்திருப்பு பட்டியல் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டிஜிபியிடம், காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நீண்ட வரிசையில் நின்று ஊதிய முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த மனுக்களை அளித்தனர். பின்னர் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் உள்ள மண்டபத்தில் காவல்துறையினரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு, அவர்களது குறைகள், ஊதியம், பதவி உயர்வு, ஓய்வூதியம் ஆகிய தொடர்பான மனுக்களை டிஜிபி பெற்றார். தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி, மதுவிலக்கு காவல்துறையினர் உட்பட வெவ்வேறு துறைகளின் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறையினருடன் கலந்துரையாடினார்.

தென்மாவட்டங்களில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் மற்றும் அதிகாரிகள் 50 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி காவல்துறை ஆணையாளரும் ஐஜியுமான ரூபேஷ் குமார் மீனா, திருநெல்வேலி சரக டிஐஜி மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் என். சிலம்பரசன் (திருநெல்வேலி), சீனிவாசன் (தென்காசி), ஆல்பர்ட் ஜான் (தூத்துக்குடி), சுந்தரவதனம் (கன்னியாகுமரி), திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்கள் விஜயகுமார், அனிதா, கீதா, உதவி ஐஜி ஷ்ரிநாத், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT