மதுரை: திருப்பதி லட்டு விவகாரத்தில் சுயநலத்தோடு முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்படுகிறார் என ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா தெரிவித்தார்.
ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சர் ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று தரிசனம் செய்தார். கோயிலிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சுய நலத்தோடு செயல்படுகிறார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டமும் கொண்டுவரவில்லை. தனது தவறைமறைக்கவே லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி மார்ச் மாதத்தோடு முடிந்தது. ஜூலைமாதத்தில் திருப்பதி கோயிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது, 4 லாரி நெய் வனஸ்பதி கலந்ததால் நிராகரிக்கப் பட்டது.
ஜெகன்மோகன் ரெட்டியை அரசியல் ரீதியாக பூஜ்ஜியமாக்கவே இதுபோன்ற செயலில் சந்திரபாபு ஈடுபடுகிறார். அவருக்கு பக்தியும் இல்லை, கடவுள் மீது நம்பிக்கையும் இல்லை. மதத்தை வைத்து அவர் அரசியல் செய்கிறார். மத்திய, மாநில அரசுகளின் விசாரணையை சந்திக்க தயாராகவுள்ளோம். லட்டுவில் எந்தக் கலப்படமும் இல்லை. லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,
உச்ச நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும். அவருக்கு கடவுள்தான் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என அனைத்து கோயில்களிலும் வேண்டுகிறேன். முடிந்தால் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும், இல்லையெனில் ராஜி னாமா செய்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும். சனாதனம் பற்றி பேசும் துணை முதல்வர் பவன் கல்யாண் தனது வீட்டில் சனாதனத்தை கடைப்பிடிப்பதில்லை. அவர் சந்திரபாபு நாயுடு எழுதி கொடுத்ததை பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.