சேது சமுத்திர திட்டம்
பேரவையில் நேற்று தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘‘சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.
அமைச்சர் கோபம்
‘‘நான் கூறுவதை புரிந்துகொள்ளாமல் அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர். தொழில்நுட்பம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இப்போதுதான் பேட்டரி பஸ் பற்றி அமைச்சர் பேசிக் கொண்டிருக்கிறார்’’ என்று டி.ஆர்.பி.ராஜா கூறியதும், கோபமடைந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ‘‘அமைச்சர்களுக்கு அனைத்தும் தெரியும். ஒரு பேட்டரி பஸ்ஸின் விலை ரூ.2 கோடி. அதன் தொழில்நுட்பம் முன்னேறிக் கொண்டிருப்பதால் விலை குறையும் என்றுதான் குறிப்பிட்டேன். தனக்குதான் எல்லாம் தெரியும் என்பதுபோல உறுப்பினர் பேசக் கூடாது’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், ‘‘அமைச்சர்களுக்கு அனைத்தும் தெரியும் என்கிறார் விஜயபாஸ்கர். இந்தியாவில் பேட்டரி பஸ்கள் எங்கெல்லாம் ஓடுகிறது என்பதை அவரால் கூற முடியுமா?’ என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘சிக்கிம் மாநிலத்தில் முதல்முறையாக சோதனை முறையில் பேட்டரி பஸ் இயக்கப்பட்டது’’ என்றார்.
‘கலர்ஃபுல்’ துரைமுருகன்
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘அம்மா ஆட்சியில் 72 வட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் கூறினார். 73-வது வட்டமாக கே.வி.குப்பத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘‘இந்த ஆட்சியை அம்மா ஆட்சி என்ற துரைமுருகனின் பெருந்தன்மைக்கு நன்றி. இன்று அவர் கலர்ஃபுல்லாக வந்துள்ளார்’’ என பாராட்டு தெரிவித்தார்.
கைதிகள் மோதல் குறித்து...
கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ‘‘கோவை சிறையில் 2 கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிறையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்’’ என்றார். அதற்கு பதிலளித்த சிறைத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘‘கோவை சிறையில் 2 கைதிகளுக்கு இடையே நடந்த சம்பவம் தனிப்பட்ட மோதல். தமிழக சிறைகள் பாதுகாப்பாகவே உள்ளன. கடந்த ஆண்டு ஒருவர் உயிரிழந்தார். தற்போது இந்தச் சம்பவம் மட்டுமே நிகழ்ந்துள்ளது’’ என்றார்.