மேயர் பிரியா 
தமிழகம்

சென்னை மாநகராட்சி சொத்து வரி 6% உயர்வு: மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய 63-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் சிவ.ராஜசேகரன், “மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவருக்கு அந்த பணிக் காலத்தை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும். நிலைக்குழு உறுப்பினர் பதவிகளை சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.” என கோரிக்கை விடுத்தார்.

நிலைக்குழு தலைவர் தனசேகர் பேசும்போது, “பல மண்டலங்களில் தூய்மைப் பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அப்பகுதியில் மாநகராட்சி தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. தனியார் நிறுவனம் முறையாக பணி செய்யவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் உறுதி அளித்தார். தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில், மாநகராட்சி சொத்து வரி 6 சதவீதம் வரை உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என பல கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோதும் அது ஏற்கப்படவில்லை.

இன்றைய கூட்டத்தில் தனியார் மயான பூமிகளுக்கு உரிமைக் கட்டணம் மற்றும் அனுமதி வழிமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மயான உரிமை கோர ஒரு சென்ட் பரப்புக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் 975 இடங்களில் 7,166 இருக்கைகள் கொண்ட புதிய கழிப்பிடங்கள் ரூ.11.67 கோடியில் கட்டவும், சைதாப்பேட்டை மற்றும் அடையாரில் தலா ரூ.9 கோடியில், தலா 70 படுக்கையில் கொண்ட நகர்ப்புற சமுதாய மருத்துவமனைகள் கட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநகரில் உள்ள 291 அம்மா உணவகங்களை ரூ. 17 கோடியில் சீரமைக்கவும், 81 இடங்களில் ரூ.12 கோடியில் 3டி மாடல் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கவும் இன்றைய கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க விதிக்கப்படும் அபராதம் ரூ.500 இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தவும், தேனாம்பேட்டை மண்டலம் 110-வது வார்டில் காம்தார் நகர் மெயின் ரோடு பிரபல திரை இசை பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பெயரை சூட்டவும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்தம் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் உதட்டுச் சாயம் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த், “அடுத்த கூட்டத்துக்கு உதட்டுச்சாயம் பூசி மாமன்றத்துக்கு வருவேன்” என சபதமிட்டார். இந்நிலையில், இன்று உதட்டுச்சாயம் பூசாமல் மன்றக் கூட்டத்துக்கு அவர் வந்தார். அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் உதட்டுச் சாயம் பூசுவது இல்லை. நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. இது ஒரு பிரச்சினையா?” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT