விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் வரும் 17-ம் தேதி கல்வி உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திருமாவளவன் செய்தி யாளர்களிடம் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஆதிதிரா விட நல பள்ளிகள் மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அரசாணையை அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தங்களின் வருவாயில் 3-ல் ஒரு பங்கை கல்விக்கு செலவிட வேண்டும் என்ற கருத்துகளை மாநாட்டின் மூலம் வலியுறுத்த உள்ளோம்.
மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி இருப்பது, வேறு மொழி பேசும் மக்களை அவமதிக்கும் செயலாகும். எனவே இந்தத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தருமபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு, அதில் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் திமுக, தேமுதிக உள்பட அனைத்து எதிர்கட்சிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும் அவர்களை சபையில் அமர விடாமல் வெளியேற்றுவது ஜனநாயக விரோத செயலாகும். மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசும் இதையேதான் செய்து வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதல்வர் அறிவித்த திட்டங்கள் எதையும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை என்றார்.