சென்னை: அதிக புரதச்சத்துடன் தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி 34 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் பதப்படுத்தப்பட்டு ஆரஞ்சு, பச்சை, நீலம், ஊதா நிறப் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுகிறது.
இதுதவிர வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 200-க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து விற்பனை செய்கிறது. இந்நிலையில், அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியதாவது:மக்களின் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் விதமாக, மூலிகைகள் சேர்ந்த பால், சுக்குமல்லி காபி , அஸ்வகந்தா பால் ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆய்வு செய்து வருகிறோம்.
மேலும், அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். தற்போது, ரூ.18-க்கு 200 மிலி, ரூ.35-க்கு 500 மிலி தயிர் பாக்கெட் வழங்கப்படுகிறது. விரைவில், அதிக புரதச்சத்துடன் தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இவற்றை 120 மிலி, 250 மிலி, 450 மிலி ஆகியவகைகளில் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.
தயிர் பாக்கெட்டில் 3.0 சதவீதம் கொழுப்புச் சத்தும், 8.5 சதவீதம் இதர புரதச் சத்துகளும் உள்ளன. இதில் சிறிது மாற்றம் செய்து, 1.5 சதவீதம் கொழுப்புச் சத்தும், 11.5 சதவீதம் இதர புரதச் சத்துகளும் கொண்ட தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், எல்லாத் தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, உடல் பயிற்சி மேற்கொள்பவர்கள், வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தயிர் வகை பாக்கெட்களை சென்னையில் உள்ள குறிப்பிட்ட பாலகங்களில் அறிமுகப்படுத்துவோம். அதன்பிறகு, படிப்படியாக மற்ற இடங்களில் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.