தமிழகம்

தார் சாலை கோரும் சென்னை - பெரம்பூர் அருந்ததி நகர் மக்கள்: இயலாமையை விவரிக்கும் அதிகாரிகள்

செ.ஆனந்த விநாயகம்

பெரம்பூர் அருந்ததி நகரில் தார் சாலை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடசென்னையின் பெரிய தொகுதி மற்றும் முக்கிய பகுதியாக பெரம்பூர் விளங்குகிறது. இங்கு வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகில் அருந்ததி நகர் எனப்படும் பகுதி உள்ளது. இப்பகுதியில் போலேரி அம்மன் கோவில் தெரு உட்பட 16 தெருக்கள் உள்ளன.

சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் மண்டலத்தின் கீழ் வார்டு 71-ன் கீழ்வரும் இப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலி தொழிலாளர்கள். இங்கு சாலைகளை சீரமைத்து புதிய சாலைகளை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. கடந்த முறை அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகளால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதால், தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.பி.பரந்தாமன் கூறியதாவது: அருந்ததி நகர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்னதாக தார் சாலைதான் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த 2 முறையும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் ஏராளமான சிரமங்களை சந்தித்து வருகிறோம்.

குறிப்பாக சிமெண்ட் சாலை இருப்பதால் அதிகளவில் நீர் தேங்குகிறது. மழைநீர் செல்ல வழியில்லை. இதுவே தார் சாலையாக இருந்தால் நீரை உறியும் தன்மை கொண்டிருக்கும். கடந்த பெருமழையின்போது ஒரு வாரத்துக்கு மேலாக நீர் தேங்கி கடுமையாக அவதியடைந்தோம்.

குறிப்பாக தேங்கிய நீர் அசுத்தமாகி, பின்னர் கொசு உற்பத்தியாகும் சூழல் ஏற்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது ஒருபுறமிருக்க கழிவுநீரகற்று வாரியம், மின்வாரியம் போன்ற துறைகளில் இருந்து சாலையை தோண்டும் பணிக்கு வருவோரும் சிமெண்ட் சாலை என்பதால் சிரமமடைவதாக கூறுகின்றனர். எனவே, தார் சாலை கோரி மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலரிடம் கடிதம் வாயிலாகவும், நேரிலும் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

எனவே, எங்கள் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், பெரம்பூர் பேருந்து, ரயில் நிலையங்களில் இருந்து வரும் பெரும்பாலான இருசக்கரவாகன ஓட்டிகள், எங்கள் பகுதி வழியாகவே ஸ்டீபன்சன் சாலையை அடைகின்றனர்.

அவர்கள் மிகுந்த வேகத்தில் வருவதால் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் விபத்துகளில் சிக்கும் சூழல் உள்ளது. அவ்வப்போது சிறு விபத்துகளும் நடந்தேறியுள்ளன. எனவே, போலேரி அம்மன் கோவில் தெரு,கோவிந்தன் தெரு ஆகிய முக்கியமான 2 தெருக்களில் வேகத்தடை அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தார் சாலை அமைக்க வேண்டும் என அருந்ததி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மழை காலத்தில் அங்கு 7 அடி வரையில் நீர் தேங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. ஓட்டேரி நல்லா கால்வாயும் இப்பகுதியும் ஒரே மட்டத்தில் உள்ளது. அங்கு நீர் ஒரு அடி உயர்ந்தால், இங்கும் நீர் தேங்கும். அங்கு நீர் வடிந்ததும், இங்கும் நீர் வடிந்துவிடும். இந்தநிலையில், அருந்ததி நகர் பகுதியில் தார் சாலை அமைத்தால் தேங்கும் நீருக்கு சாலை நிச்சயமாக பெயர்ந்துவிடும்.

மேலும், அங்கு பெரும்பாலான தெருக்கள் குறுகிய அளவில் இருக்கின்றன. இதனால் அந்த தெருக்களில் தார் சாலை அமைப்பதற்கான வாய்ப்பில்லை. ஆனால், சிமெண்ட் சாலை அமைக்கும் பட்சத்தில் நீர் வடிவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய முடியும். அதேநேரம், சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் உள்ளன.

அண்மையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரி செய்து வருகிறோம். 8 தெருக்களில் பள்ளங்களை சீரமைத்த நிலையில், 2 தெருக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அவற்றையும் விரைந்து சீரமைத்துவிடுவோம். அதேநேரம், சாலை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி உயரதிகாரிகள் பரிசீலனை செய்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT