பழநி: பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக, திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது பழநி கோயில்நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. திருப்பதி லட்டு பிரசாத சர்ச்சையைத் தொடர்ந்து, பழநி பஞ்சாமிர்தம் குறித்து திரைப்பட இயக்குநர் மோகன் ஜி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சமயபுரம் கோயில் நிர்வாகம் அளித்த புகாரில், மோகன்ஜி மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர். ஆனால், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோயில் நிர்வாகம் சார்பில் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. ஏற்கெனவே, பஞ்சாமிர்தம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பதிவிட்டதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், வர்த்தகப் பிரிவு நிர்வாகி செல்வகுமார் மீதும் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.