சென்னை: யூடியூபரான வாராகியின் மனைவி மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் அவரது வீட்டின் முன்பாக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சார்-பதிவாளரை பணம் கேட்டு மிரட்டியதாக யூடியூபரான வாராகி என்பவரை மயிலாப்பூர் போலீஸார் கடந்த செப்.13ம் தேதி அன்று கைது செய்தனர். பின்னர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், வாராகியின் மனைவி நீலிமா மற்றும் குழந்தைகளை போலீஸார் சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகக் கூறி வாராகியின் சகோதரி கோகிலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘சென்னை மாநகர காவல் ஆணையரான அருண் குறித்து யூடியூப் சேனல்களில் பல்வேறு செய்திகளை வெளியிட்டதால் வாராகியை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்துள்ளனர். தற்போது வாராகியின் வீட்டுக்கு வெளியில் 24 மணி நேரமும் 2 போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் அனுமதி வாங்கி விட்டுத்தான் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்குக்கூட வெளியே செல்ல முடிகிறது. வாராகியின் மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே சிறை வைத்துள்ளனர். இது வாராகியின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே வாராகியின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ள போலீஸாரை உடனடியாக அங்கிருந்து செல்ல உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஏ.டி. மரியா க்ளேட் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணன், “வாராகியை போலீஸார் உள்நோக்கத்துடன் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். அவரது வீட்டில் உள்ளவர்களையும் அச்சுறுத்தும் வகையில் வீட்டின் முன்பாக போலீஸாரை நிறுத்தி வைத்துள்ளனர்” என குற்றம் சாட்டினார்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், “தற்போது வாராகியின் வீட்டின் முன்பாக போலீஸார் யாரும் இல்லை” என்றார். இதையடுத்து நீதிபதிகள், “வீட்டின் முன்பாக போலீஸாரை நிறுத்தி அச்சுறுத்துவதும் ஒருவகையில் சட்டவிரோத காவல் தான்” எனக் கருத்து தெரிவித்து ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தனர்.