சென்னை: தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்துக்கு இன்று (செப்.25) சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே நமது இலக்கு என அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வலியுறுத்தினார்.
தமிழக அரசின் தொழில்துறையின் கீழ், தமிழகத்தில் முதலீடு செய்யும், விரிவாக்கத்தை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதி உள்ளிட்ட உதவிகளை வழங்கும் வகையில், தொழில் வழிகாட்டி நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளது. இன்று (செப்.25) தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வழியில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்துக்குச் சென்றார்.
அங்கு முதல்வரை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அலுவலர்கள் முதல்வரை வரவேற்றனர். அங்கு பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் அலுவலர்களுடன் முதல்வர் உரையாடினார். முதல்வர் அங்கிருந்து புறப்படும் முன்னதாக, அங்குள்ள தகவல் பலகையில், ‘50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நமது இலக்கு’ என எழுதி கையொப்பமிட்டார்.
முதல்வரின் வருகை தொடர்பாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘கடந்த 20 ஆண்டுகளாக தமிழக தொழில் வளர்ச்சிக்காக முன்னணியில் செயல்பட்டு வரும் நிறுவனம் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம். இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் அலுவலர் குழுவினரை சந்தித்து, அவர்களின் கடும் உழைப்பை பாராட்டியதுடன், உற்சாகப்படுத்திய முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.
கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கான முதலீடுகளை தமிழகம் ஈர்த்ததை கொண்டாடி வரும் நிலையில், முதல்வர், அடுத்த முதலீட்டுக்கான இலக்கை எங்களுக்கு அளிக்கவில்லை. அதற்கு பதில் ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டும் வகையிலும், பரவலான வளர்ச்சியை உருவாககும் வகையிலும் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்கை அளித்துள்ளார். அவரது அயராத பணிக்கிடையில் நேரம் எடுத்து, வழிகாட்டி நிறுவனத்தை பார்வையிட்டது பெருமைக்குரியதாக இருந்தது. தற்போது ரூ.10 லட்சம் கோடி முதலீடு மற்றும் 31 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து உருவாகிறது. இன்னும் பல முதலீடுகள் வர உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
இதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில், ‘அரசு நிர்வாகத்தின் இளம் ரத்தங்களான வழிகாட்டி நிறுவன பணியாளர்களைச் சந்தித்தேன். இவர்களின் சிறப்பான பணியால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளில் 60 சதவீதம் பணிகள் நிறைவேறியுள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்ய அறிவறுத்தியுள்ளேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.