தமிழகம்

‘அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிப்பு’ - விருதுநகர் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் புகார்

இ.மணிகண்டன்

விருதுநகர்: அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்படுவதாக விருதுநகர் மாவட்டத்தில் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அவ்வாறு பணம் வசூலித்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் எச்சரித்தார்.

விருதுநகரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும் விருதுநகர் எம்பி-யுமான மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். குழுவின் உறுப்பினர் செயலரும் மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

ராமநாதபுரம் எம்பி-யான நவாஸ்கனி, தென்காசி எம்பி-யான ராணி, எம்எல்ஏ-க்கள் சீனிவாசன் (விருதுநகர்), அசோகன் (சிவகாசி), ரகுராமன் (சாத்தூர்), சிவகாசி மேயர் சங்கீதா மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடமும் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படவில்லை. ஏழாயிரம் பண்ணை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்படுகிறது. நன்கொடை என்று பணம் வசூல் செய்யப்பட்டால் அதற்கான நன்கொடை ரசீதும் வழங்கப்படுவதில்லை என எம்எல்ஏ-க்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “இதுபோன்று மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும்” என எச்சரித்தார்.

தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள் பேசுகையில், “அங்கன்வாடி மையங்களில் போதிய அளவு மாணவர்கள் வருகை இல்லை. மாணவர்கள் வருகையை உறுதிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். விருதுநகர் மாவட்டத்தில் 1,504 அங்கன்வாடி மையங்கள் உள்ளதாகவும், இங்கு 32,840 குழந்தைகள் வந்து செல்வதாகவும், கடந்த ஆண்டு 33 ஆயிரம் குழந்தைகள் அங்கன்வாடிக்கு வந்து சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “ஆய்வுக்குச் செல்லும் அங்கன்வாடிகளில் பெரும்பாலும் குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு குழந்தைகள் அனைவரும் அங்கன்வாடி மையங்களுக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும்” என அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுவதைப் போல சத்துணவுத் திட்டம் சிறப்பாகவும் தரமாகவும் செயல்படுவதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அதோடு, சமுதாய கழிப்பறைகளில் தண்ணீர் வசதி, மின் வசதி போன்ற அடிப்படை வசதிகளை சரிசெய்து முறையாக பயன்பட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மாணிக்கம்தாகூர் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு மத்திய அரசின் ‘வத்சலா திட்டத்தின்’ கீழ் விருதுநகர் மாவட்டத்தில் ஒருவருக்குக் கூட இதுவரை நிதியுதவி வழங்கப்படவில்லை. இதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்போம். திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கும் மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. சிவகாசி இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தேவைகள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. அதோடு, பொதுக் கழிப்பிடங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையும் கோரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT