கேளம்பாக்கம் பகுதியில் முறையாக மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள்  மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
தமிழகம்

கேளம்பாக்கத்தில் அடிக்கடி மின்வெட்டு: மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

பெ.ஜேம்ஸ்குமார்

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் பகுதியில் அடிக்கடி நிகழும் மின்வெட்டை கண்டித்தும், முறையாக மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் பொதுமக்கள் இன்று மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு புகாரளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சியில் தொடர் மின்வெட்டு, அடிக்கடி மின் தடை இருந்துவருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் பழுதாகி வருகிறது. இதனால், இன்று கேளம்பாக்கம் துணை மின்நிலைய அலுவலகத்தை கேளம்பாக்கம் வியாபாரிகள் சங்கத்தினர், குடியிருப்பு சங்கத்தினர், பொதுமக்கள் என 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

மேலும், முறையான மின்தடை அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. தெருக்களில் மின்கம்பங்கள் பழுது ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப 33 கே.வி டிரான்ஸ்ஃபார்மரை 110 கே.வி-யாக மாற்றும் பணி கிடப்பில் உள்ளது என மக்கள் பல்வேறு குற்றச்சாட்டு தெரிவித்து மின் வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

இதற்கிடையில், தகவல் அறிந்த திருப்போரூர் எம்எல்ஏ-வான பாலாஜி மக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். அவர்களிடம் புகார் மனுக்களையும் பெற்றார். பின்னர், மின் வாரிய அதிகாரிகளிடம் பேசிய அவர், ''அதிகாரிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மக்களின் கோரிக்கைகளை கேட்டு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்தார்.

அதற்கு அதிகாரிகள், ''மின்தடை ஏற்பட்டால் சிறுசேரி மற்றும் திருப்போரூர் துணை மின் நிலையத்திலிருந்தும் மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவையான மின் உபகரணங்கள் கோரியும், தரம் உயர்வுக்கான கோப்பும் அரசுக்கு முன்மொழிவுக்கு அனுப்பி உள்ளோம். நிதி ஒதுக்கப்பட்டதும் சீரமைக்கப்படும். அதன் பிறகு சீரான மின் விநியோகம் இருக்கும்'' என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

SCROLL FOR NEXT