ஸ்ரீரங்கம் வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெற்றியில் மஞ்சள் பொட்டு வைத்து, கோயில் பிரசாதங்களை வழங்கி அர்ச்சகர்களும், பூரண கும்ப மரியாதை அளித்து பிரா மண அமைப்பினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமை மீட்பு பிரிவு ஆலோசனைக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் திருச்சி வந்தார். முதல்நாள் நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில், நேற்று ஸ்ரீரங்கத்தில் நடக்கும் கட்சிப் பிரமுகர்கள் இல்ல விழாக்களில் பங்கேற்க திட்டமிடப் பட்டிருந்தது.
அங்கு செல்வதற்காக நேற்று காலை, சங்கம் ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்ட ஸ்டா லின் அம்மா மண்டபம், ராகவேந்திரா நுழைவுவாயில், மேலூர் சாலை, உத்திரவீதி வழியாகச் சென்றார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் முக்கிய வாசல்களில் ஒன்றான ரெங்கா ரெங்கா கோபுரம் அருகே சென்றபோது, கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையிலானோர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்காக காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின், சுந்தர் பட்டர் உள்ளிட்டோருக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். அப்போது அவர்கள் ஸ்டாலினுக்கு மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தனர். ஏற்கெனவே பெருமாளிடம் வைத்து வழிபாடு செய்யப்பட்ட மாலை, மஞ்சள் பிரசாதம் உள்ளிட்டவற்றை அவரிடம் வழங்கினர்.
அப்போது சுந்தர் பட்டர் வேத மந்திரங்களைக் கூறியபடியே, பெருமாளின் மஞ்சள் பிரசாதத்தை ஸ்டாலினின் நெற்றியில் வைத்து, ஆசி வழங்கினார். சிரித்த முகத்துடன் அதை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், பின்னர் உடனடியாக, தனது நெற்றியில் வைக்கப்பட்ட மஞ்சள் பொட் டைக் கைகளால் துடைத்தார். பொன்னாடையை தோளில் இருந்து எடுக்கும்போது, அந்தப் பொன்னாடையால் நெற்றியில் இருந்த மஞ்சளை முற்றிலுமாக துடைத்துக் கொண்டார்.
தொடர்ந்து, அங்கு அலங்கரித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானை ஒன்று, ஸ்டாலினின் அருகில் வந்து, அவருக்கு மாலை அணிவித்தது. அந்த யானைக்கு கரும்புத் துண்டுகள், வெல்லக் கட்டிகளை ஸ்டாலின் வழங்கினார்.
பிறகு வெள்ளை கோபுரம் அருகே அகோபில மடம் வாசலில் சென்றபோது, பிராமண அமைப்பினர் சார்பில் ஸ்டாலினுக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கிய ஸ்டாலின், அவர் களிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு, கீழ அடையவளஞ்சான் வீதியில் உள்ள திருமண மண்டபத்துக்குச் சென்றார். அவருடன் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன் னாள் அமைச்சருமான கே.என். நேரு உள்ளிட்டோர் சென்றனர்.
இதற்கிடையே, பெருமாள் பிரசாதமான மஞ்சளை ஸ்டாலின் நெற்றியில் வைத்தது பற்றியும், அவர் முதல்வராக வேண்டி ஸ்ரீரங்கத்தில் உள்ள வேணுகோபாலன் சன்னதியில் நேற்று முன்தினம் இரவு சுக்ர ப்ரீத்தி யாகம் நடத்தப்பட்டதாகவும், 60 பிராமணர்களுக்கு புத்தாடைகளும், யானைகளுக்கு தலா 60 கிலோ வெல்லம், கரும்பு ஆகியவற்றை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள், விமர்சனங்களும் உலவின. இத்தகவல்கள் அனைத்தும் கற்பனையே; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்டாலினுக்காக எந்த யாகமும் நடத்தப்படவில்லை என்கின்றனர் திமுகவினர்.
‘மஞ்சள் பிரசாதத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றார்’
மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, அர்ச்சகர் சுந்தர் பட்டர் கூறியதாவது:
ஸ்ரீரங்கத்துக்கு வந்த ஸ்டாலினை ரெங்கா ரெங்கா கோபுரம் அருகே சந்தித்து, வரவேற்றோம். கோயிலுக்குள் வந்து பெருமாளை தரிசித்துவிட்டு செல்லலாமே என்று அழைத்தோம். “தற்போது நேரம் இல்லாததால், வரமுடியவில்லை. எனக்காக நீங்கள் வேண்டிக்கொண்டதற்கு நன்றி” என்றார். “என்னை வரவேற்றபோது பாடப்பட்டது என்ன?” என்று கேட்டார். நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றேன். அதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட அவரது நெற்றியில் மஞ்சள் பொட்டு வைத்தபோது எனக்கு சற்று தர்மசங்கடமாக இருந்தது. சுவாமி பிரசாதம் என்பதால் வைத்தேன். அவர், பொறுமையுடனும், சிரித்த முகத்துடனும் ஏற்றுக்கொண்டார். மனதார அவற்றை ஏற்றுக்கொண்டதை, அவரது முகமலர்ச்சி வெளிக்காட்டியது.
நாங்கள் கொடுத்த மஞ்சள், குங்குமம், கல்கண்டு, பழங்கள், மஞ்சளில் பதிக்கப்பட்ட அபயஹஸ்த அடையாளம் ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டார். அவரது நெற்றியில் வைத்த மஞ்சள் பொட்டை அவர் உடனே துடைத்ததை நான் கவனிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.