செல்வப்பெருந்தகை 
தமிழகம்

“காந்தி சிலையை அகற்ற ஒருபோதும் காங்கிரஸ் அனுமதிக்காது” - செல்வப்பெருந்தகை

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: “காந்தி சிலையை அகற்ற ஒரு போதும் காங்கிரஸ் அனுமதிக்காது” என காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் அருகில் பழமையான காந்தி சிலை உள்ளது. இச்சிலையை கடந்த சில நாட்களுக்கு முன் இரவோடிரவாக அகற்ற முயற்சித்தனர். காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலையை அகற்ற விடாமல் தடுத்தனர்.

இன்று (செப்.24ம் தேதி) குளித்தலைக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வந்தார். குளித்தலை காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “குளித்தலை பேருந்து நிலையம் முன்பு உள்ள காந்தி சிலையை அகற்றுவதாக கடந்த சில நாட்களுக்கு முன் இரவு 11 மணிக்கு தகவல் வந்தது.

உடனடியாக ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு சிலை அகற்றும் நடவடிக்கை நிறுத்தக் கூறினேன். இந்நிலையில் காந்தி சிலையை அகற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் மீண்டும் நடவடிக்கை எடுத்து வருகிறது. காந்தி உலகம் போற்றும் தலைவர். இச்சிலையை அகற்ற நகராட்சியில் ஆளுங்கட்சி தீர்மானம் நிறைவேற்றி இருப்பது வருந்தத்தக்கது. இதுகுறித்து தமிழக முதல்வரை சந்தித்து பேச உள்ளேன். காந்தி சிலையை அகற்ற ஒரு போதும் காங்கிரஸ் அனுமதிக்காது’’ என்றார்.

SCROLL FOR NEXT