இடமிருந்து வலம்: எம்.பழனியாண்டவர், எம்.சத்தியபாமா, எம்.லட்சுமணன், தை.சி.சபரி கிரிசன்,ஆர்.ரமேஷ். 
தமிழகம்

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர்கள்!

தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் எல்சிவியர் ஆண்டுதோறும் வெவ்வேறு துறைகளில் 2 சதவீதம் விஞ்ஞானி தரவரிசைகளை வெளியிட்டு வருகின்றன. எச்-இன்டெக்ஸ், கோ-ஆதர்ஷிப், எச்.எம்-இன்டெக்ஸ் போன்ற மேற்கோள் அளவீடுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை விஞ்ஞானிகளின் உலகளாவிய நிலைகளை குறிக்கிறது.

நிகழாண்டு ஆகஸ்ட் தரவு புதுப்பிப்பில் 22 அறிவியல் துறைகள், 174 துணைத் துறைகள் கீழ் 2.17 லட்சத்துக்கும் மேலான ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவில் 2,939 விஞ்ஞானிகள் வாழ்நாள் நீண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 5,351 விஞ்ஞானிகள் 2023-ம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த தர அறிக்கையின் ஏழாவது பதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அறிவியல் ஆசிரியர் தரவுத்தளத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகள், நிகழாண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் உலகின் 2 சதவீதம் விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எம்.லட்சுமணன் (இயற்பியல்), ஆர்.ரமேஷ் (வேதியல்), எம்.பழனியாண்டவர் (வேதியியல்), எம்.சத்தியபாமா (தாவரவியல்), முனைவர் தை.சி.சபரி கிரிசன் (இயற்பியல்) ஆகியோர் இந்தப் பட்டியிலில் உள்ளனர். பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த முனைவர் கே.ரவிச்சந்திரன் (இயற்பியல்), முனைவர் எம்.அய்யனார் (தாவரவியல்), முனைவர் எம்.ஜோதிபாஸ் (இயற்பியல்) ஆகிய மூவரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், ஆராய்ச்சிப் பங்களிப்பிற்காக தரவரிசைப் பெற்ற விஞ்ஞானிகள், அனைத்து ஆசிரியர்களை பாராட்டினார். மேலும் துணைவேந்தர் ம.செல்வம் கூறுகையில், “2024-ம் ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் 36வது இடத்தைப் பெற்றுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் பிற கல்விப் பங்களிப்புகளில் சிறந்து விளங்குவதற்கு பல்கலைக்கழகம் செய்து வரும் சிறப்புப் பணிகளை பிரதிபலிக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT