திருநெல்வேலி: சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டதில் இருந்தும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததில் இருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து சென்றதாக காவல் துறை விசாரணையில் புலப்படவில்லை என்று நெல்லை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது .
திருநெல்வேலி மாநகர காவல்துறை இன்று (செப்.24) வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எலைக்கு உட்பட்ட டிவிஎஸ் நகரில் கடந்த 21-ம் தேதி மாலை 4.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஸமாஜம் வரும் வழியில், 14-வது தெற்கு தெரு முக்கில் வரும்போது அடையாளம் தெரியாத 4 நபர்கள் பைக்கில் வந்து தன் மகன் அகிலேஷ் அணிந்திருந்த பூணூலை அறுத்துவிட்டு, இதுபோல் பூணூல் அணிந்து வரக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றதாக அகிலேஷின் தந்தை சுந்தர் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது.
இப்புகார் தொடர்பாக சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் இடத்திலும், சாலையிலும் உள்ள 5 இடங்களில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் 6 சாட்சிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் மற்றும் நேரத்தில் சந்தேகத்துக்கு இடமாக இருசக்கர வாகனங்களில் யாரும் அகிலேஷ் என்பவரிடம் வந்து பூணூலை அறுத்ததாக பதிவுகள் இல்லை. அகிலேஷ் என்பவர் சம்பவ இடம் தாண்டி பொறுமையாக நடந்து வந்து தனக்கு தெரிந்தவர்களிடம் பேசிவிட்டு, பின்னர் திரும்பி செல்வதாக பதிவாகியுள்ளது.
சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டதில் இருந்தும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததில் இருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து, அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் புலப்படவில்லை. எனினும் காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.