தமிழகம்

உதவித் தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத் திறனாளிகள் அக்.23-ல் சென்னையில் பெருந்திரள் தர்ணா

எம். வேல்சங்கர்

சென்னை: ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, சென்னையில் அக்.23-ம் தேதி ‘பெருந்திரள் தர்ணா’ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலத் தலைவர் தோ.வில்சன் இன்று (செப்.24) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழக அரசு சமீபத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை இரட்டிப்பாக்கி உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

அதேவேளையில், மாதாந்திர உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளில் சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.1,500-ம், கடும் ஊனமுற்றோருக்கு ரூ. 2 ஆயிரமும் மாத உதவித் தொகையாக தமிழக அரசு வழங்குகிறது.இது, இன்றைய வாழ்வாதாரச் சூழலில் மிகக் குறைந்த உதவித் தொகையாகவே உள்ளது. அதேவேளையில், ஆந்திர அரசு சாதாரண ஊனமுற்றோருக்கு ரூ.6 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.10 ஆயிரமும், வெளியே நடமாட இயலாமல் வீட்டிலேயே முடங்கி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15, ஆயிரமும் வழங்கி வருகிறது.

எனவே, தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஆந்திர மாநில அரசு வழங்குவதைப் போன்று மாத உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை அனைத்தையும் மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் மட்டுமே வழங்கிட வேண்டும். உதவித் தொகை கேட்டு புதிதாக விண்ணப்பித்து இதுவரை உதவித்தொகை கிடைக்காமல் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனே உதவித் தொகை வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனே வேலை வழங்க வேண்டும். வயது வரம்பு பாராமல் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, அக்.23-ம் தேதி அன்று எங்கள் சங்கம் சார்பில் சென்னையில் ‘பெருந்திரள் தர்ணா’ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தர்ணாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT