மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடியால் இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து 18-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் பேராசியர்கள் மற்றும் அலுவலர்கள் இன்று கருப்புத் துணியால் கண்ணை கட்டிக்கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகமானது கடந்த சில மாதங்களாகவே நிதி நெருக்கடியால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி கருப்பு பட்டை அணிந்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் தொடங்கினர். அன்று முதல் பணிக்கு இடையூறில்லாத வகையிலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் காலையில் 9 மணி முதல் 10 மணி வரையிலும் அதேபோல் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தேவைப்பட்டால் ஆசிரியர்கள், அலுவலர்கள் இரவு முழுக்க உள்ளிருப்புப் போராட்டம் செய்வது என்றும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். அகிம்சை வழியில் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஊதிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரியும் அவர்கள் தொடர்ந்து 18வது நாளாக இன்றும் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.
இதனிடையே ஒரு மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவுகளுக்காக அரசு ரூ.8 கோடி வழங்கியும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கன்வீனர் குழு தலைவர் காலம் தாழ்த்துவதையும், பேராசிரியர்களும் அலுவலர்களும் கண்டித்து வருகிறார்கள்.