சென்னை: ‘தமிழக அறிவியல் அறிஞர்’ விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் பொன்முடி, “மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உயர்கல்வித் துறையின் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் தமிழக அறிவியல் அறிஞர் விருது வழங்கும் விழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று (செப்.23) நடைபெற்றது. உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் சா.வின்சென்ட் வரவேற்புரை வழங்கினார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2018, 2019, 2020, 2021ம் ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 பேருக்கு ‘தமிழக அறிவியல் அறிஞர்’ விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அந்த வகையில் தஞ்சாவூர் இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் சி.அனந்த ராமகிருஷ்ணன், சென்னை பல்கலைக் கழகத்தின் நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் தேசிய மையத்தின் இயக்குநர் சு.பாலகுமார், தமிழ்நாடு கால்நடையியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பா.தென்சிங் ஞானராஜ், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆர்.ராவணன், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறை தலைவர் எம்.சுமதி, திருச்சி என்.ஐ.டி வேதியல் துறை தலைவர் எஸ்.வேல்மதி, நாமக்கல் கால்நடைக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் முதல்வர் எம்.செல்வராஜூ, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் க.இரவி உட்பட 43 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பின்னர் விழாவில் அமைச்சர் பேசியதாவது: ஆய்வு மனப்பான்மை, அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கத்தான் இந்த விருதுகள் வழங்கப் படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் என்பது அறிவியல் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல... கலை படிப்பவர்களும் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல்வேறு பாடத் திட்டங்களை தெரிந்து அந்த முறைகளில் ஆய்வு செய்வதுதான் முக்கியம். இந்தியளவில் உயர்கல்வி துறையில் 52 சதவீதம் தமிழகம் இருப்பது பெருமையளிக்கக் கூடியது.
ஆனால், அது மட்டும் போதாது. திறமையையும் வளர்க்க வேண்டும். படிக்கிறபோதே தொழில் ரீதியாக மாணவர்கள் வளர வேண்டும். வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி வேலை கொடுப்பவர்களாகவும் மாணவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவியல் ரீதியான வளர்ச்சி என்பது அனைத்துத் துறைகளிலும் இருக்க வேண்டும். இதையொட்டி மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதற்காக தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
இதையொட்டியே ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் 120 பேருக்கு மாதம் ரூ.25 ஆயிரமும், ஆவணக் காப்பகம் மற்றும் வரலாறுகளில் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிகளை ஊக்குப்படுத்தும் விதமாக ஆய்வு மையத்தை உருவாக்க ரூ.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் அரசியலுக்காக அல்ல. அரசியலுக்கும் அப்பாற்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக செயலர் பரதீப் யாதவ் பேசுகையில், “புதிய தொழில் நுட்பங்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றை பல்வேறு துறைகளில் செயல்படுத்துவதிலும் தேவைப்படும் அனைத்து கட்டமைப்பும் தமிழகத்தில் உள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்வில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் டி.ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பேராசிரியர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.