செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி குழும நிறுவனர் மீனா முத்தையாவின் 90-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெ ற்றது. பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, தொழிலதிபர் நல்லிகுப்புசாமி உள்ளிட்டோர் மீனா முத்தையாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். உடன் அவரது மகன் எம்.ஏ.எம்.எம்.அண்ணாமலை. | படம் : எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

செட்டிநாடு வித்யாஷ்ரம் குழும நிறுவனர் மீனா முத்தையாவின் 90-வது பிறந்தநாள் விழா

செய்திப்பிரிவு

சென்னை: செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி குழுமத்தின் நிறுவனர் மீனா முத்தையாவின் 90-வது பிறந்தநாள் விழா, சென்னையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி குழுமத்தின் நிறுவனர் மீனா முத்தையாவின் 90-வது பிறந்தநாள் விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மாணவிகளின் இறைவணக்கத்துடன் தொடங்கிய விழாவில், பேச்சாளர் தேவகோட்டை ராமநாதன் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் முதல்வர் அன்புலட்சுமி, மீனா முத்தையாவுக்கு நினைவு பரிசு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்திருந்த அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஸ், பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, திக தலைவர் கி.வீரமணி, தொழிலதிபர்கள் ஐசரி கணேஷ், நல்லி குப்புசாமி உட்பட முக்கிய விருந்தினர்கள் பலர் மீனா முத்தையாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஆசி பெற்று சென்றனர்.

இதையடுத்து பிறந்தநாள் இசை ஒலிக்க, மீனா முத்தையா கேக் வெட்டி தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடினார். முன்னதாக, பிறந்தநாளையொட்டி, மக்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கத்துடன் அமையவுள்ள ஆர்.ஏ.ஆர்.இ என்ற ‘தி ராயல் அகாடமி’ கல்வி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டினார். அவரது மகன் எம்.ஏ.எம்.எம்.அண்ணாமலை, மகள் பிரீத்தா ரெட்டி, பேத்திகள் மெய்யம்மை, மீனாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விழாவில் எம்.ஏ.எம்.எம். அண்ணாமலை பேசுகையில், “பல்வேறு மனிதர்களின் வாழ்கை மாற்றத்துக்கு உதவியவர் மீனா முத்தையா. இன்றைக்கும் அவர் நம்மை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். விழாவில் தொடங்கப்பட்ட அகாடமி, அவரது வாழ்க்கை பயணத்தின் ஓர் சாட்சியாகும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து தனிநபர்களின் நற்சேவையை பாராட்டி வழங்கப்படும் ராஜா செட்டிநாடு விருதை, டாக்டர் ராஜா விஜயகுமாருக்கு, மீனா முத்தையா வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து ‘மீனா ஆண்ட்டியின் வாழ்க்கை பயணம்’ என்ற காணொளி திரையிடப்பட்டது. பின்னர் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பட்டிமன்றத்தில், நாடும் வீடும் முன்னேற பெரிதும் தேவை “இளமையின் ஆற்றலே” - “முதுமையின் வழிகாட்டலே” என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர்கள் எஸ்.ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் உரையாற்றினர்.

SCROLL FOR NEXT