தமிழகம்

கண்ணப்பர் திடலில் வசிக்கும் 114 வீடற்றோர் குடும்பங்களுக்கு இன்று வீடு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் உதயநிதி வழங்குகிறார்

செய்திப்பிரிவு

சென்னை: கண்ணப்பர் திடலில் 22 ஆண்டுகளாக வசித்து வரும் 114 வீடற்றோர் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் உதயநிதி இன்று வழங்குகிறார்.

சென்னை ரிப்பன் மாளிகை அருகில் வசித்து வந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த 2002-ம் ஆண்டு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிக்காக அகற்றப்பட்டன.

இக்குடும்பங்கள் கண்ணப்பர் திடல் பகுதியில் அப்போது தங்க வைக்கப்பட்டன. அன்று முதல் இன்று வரை, அடிப்படை வசதிகள் இன்றி அங்கு பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் 'இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியான பின்னர், 114 குடும்பங்களை அடையாளம் கண்டு, மூலக்கொத்தளத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், பயனாளி பங்குத்தொகை ரூ.4 லட்சத்து 27 ஆயிரம் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. இதில் 2 பங்கு தொகையை மாநகராட்சி வழங்க முன்வந்துள்ளது. 1 பங்கை பயனாளிகள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளும் 20 ஆண்டுகளுக்கு செலுத்தும் வகையில் வங்கிக் கடன் பெற்று பயனாளி பங்குதொகையை அளிக்க முன்வந்துள்ளனர்.

இந்நிலையில், பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT