தமிழகம்

போக்குவரத்து ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், ஊதிய ஒப்பந்தம் - ஒரே நேரத்தில் பேச்சு நடத்த கோரிக்கை

செ.ஆனந்த விநாயகம்

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் மற்றும் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. அடுத்தடுத்து, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என பண்டிகைகள் வருகின்றன.

நெரிசலை சமாளிக்க வழக்கமான பேருந்துகளோடு, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய சூழல் இருக்கிறது. பண்டிகை காலத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே, அடுத்த கட்டமாக ஊதிய ஒப்பந்தம், தீபாவளி போனஸ் குறித்து ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கான, தேதியை விரைந்து அறிவிக்க வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT