தமிழகம்

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்த ‘காவிரி’ சுரங்க இயந்திரம்

செய்திப்பிரிவு

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பசுமை வழிச்சாலை - அடையாறு சந்திப்பு வரையிலான சுரங்கப்பாதை பணியை `காவிரி' சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக நிறைவு செய்தது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படு கிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ) ஆகும். இத்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியிலிருந்து அடையாறு சந்திப்புவரையிலான 1.226 கி.மீ.தொலைவுக்கான சுரங்கப் பாதை அமைக்கும் பணி கடந்தஆண்டு பிப்.16-ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு சுரங்கப் பாதையின் நீளமும் 1,228 மீட்டர்ஆகும்.

முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’, இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரமான `அடையாறு' ஆகிய இரு இயந்திரங்கள் அடுத்தடுத்து சுரங்கப் பணிகளைத் தொடங்கின. இவை அடையாறு ஆற்றை அடுத்தடுத்து கடந்து, அடையாறு சந்திப்பை நோக்கிநகர்ந்து வந்தன.

குறிப்பாக, முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான `காவிரி' கடந்த ஜூனில் அடையாறு மேம்பாலத்தின் கீழே இருந்தது. வலுவான பாறைகள் காரணமாக, பணிகள் மெதுவாகவே நடைபெற்றன.

அடையாறு சந்திப்பு: இந்நிலையில், `காவிரி' சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கப்பாதை அமைக்கும் பணியைவெற்றிகரமாக முடித்து, அடையாறு சந்திப்பை வந்தடைந்தது.

இந்நிகழ்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், சுரங்கப்பாதை கட்டுமான பொது மேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி, ரவிச்சந்திரன், லார்சன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT