சென்னையில் வாகன சோதனையின்போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு காரில் தப்பிய 3 பேர், விழுப்புரம் அருகே போலீஸாரிடம் சிக்கினர். தாம்பரம் போலீஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னையில் மேற்கு தாம்பரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீஸார், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் குடிபோதையில் இருந்த மதுரை கீழக்கரையை சேர்ந்த முருகன், அவருடைய தம்பி மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் போலீஸாரிடம் தகராறு செய்தனர். பின்னர், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை தாக்கி விட்டு அவர்கள் தப்பினர்.
விழுப்புரத்தை நோக்கி அவர்களுடைய கார் சென்றது. உடனே, விழுப்புரம் மாவட்ட போலீஸாருக்கு சென்னை போலீஸார் இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம் எஸ்பி மனோகரன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி சீத்தாராமன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தினர். விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முதல் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வரை தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது சென்னை
போலீஸார் தெரிவித்த குறிப்பிட்ட பதிவு எண் உள்ள அந்த கார், விக்கிரவாண்டி சோதனை சாவடி அருகே வந்தது. உடனே போலீஸார் அந்த காரை நிறுத்துமாறு சைகை செய்தனர்.ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.இதையடுத்து போலீஸாரும் தங்களது வாகனத்தில் விரட்டிச் சென்று விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூரில் அந்த காரை பிடித்தனர்.
பின்னர் அந்த காரில் இருந்த முருகன் உள்ளிட்ட 3 பேரையும் பிடித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு, சனிக்கிழமை காலை தாம்பரம் போலீஸாரிடம் அவர்களை விழுப்புரம் மாவட்ட போலீஸார் ஒப்படைத்தனர். அவர் களை தாம்பரம் போலீஸார் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.