தமிழகம்

நாகப்பட்டினத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பேராசிரியர் கைது

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

மேலையூரில் உள்ள பூம்புகார் கலை அறிவியல் கல்லூரியின் பொருளாதாரத் துறைத் தலைவர் ராஜூ என்கிற கிருஷ்ணராஜூ(50). இவர் தனது மனைவியின் நிர்வாகத்தில் குத்தாலம் எடத் தெருவில் ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியை நடத்தி வருகிறார். அப்பள்ளியில் மாலைநேரத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவ மாணவிகளுக்கு கிருஷ்ணராஜூ தனி வகுப்பு(டியூசன்) எடுத்து வருகிறார்.

ஆடிப்பெருக்கு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள், 4 மாணவிகளை மட்டும் தனி வகுப்புக்கு வரச் சொல்லியிருக்கிறார். அவர்களில் மாணவிகளை மட்டும் தனித்தனியே தனது அறைக்கு அழைத்து அவர்களிடம் உடல்ரீதியான சில விஷயங்களை பேசியிருக்கிறார். தவறான நோக்கத்தில் மாணவி ஒருவரின் அருகிலும் அவர் செல்லவே பயந்துபோன மாணவி அழுது கொண்டே அங்கிருந்து வெளியேறி தனது வீட்டில் உள்ளவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

அதிர்ந்து போன அவர்கள் உடனடியாக குத்தாலம் காவல் நிலையத்திற்கு வந்து இதுகுறித்து புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த குத்தாலம் போலீஸார் திங்களன்று காலை கிருஷ்ணராஜூவை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT