தமிழகம்

இடம்பெயர்ந்த யானைகள்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்:யானைகள் நடமாட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்த கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை இன்று (புதன்கிழமை) அனுமதி வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினரின் அனுமதியை பெற வேண்டும். கடந்த 2 நாட்களாக, பேரிஜம் ஏரி பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கும் பாறை, மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு ஆகிய சுற்றுலா இடங்களும் உள்ளன. வனத்துறையினரின் தடையால் இப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் யானைகள் பேரிஜம் ஏரிப் பகுதியை விட்டு இடம் பெயர்ந்து வேறு பகுதிக்கு சென்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று (புதன்கிழமை) காலை முதல் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

SCROLL FOR NEXT