தமிழகம்

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய தடை விதித்தது செல்லும்: நித்யானந்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைவதற்கு கீழ் நீதிமன்றம் விதித்த தடையை விலக்கக் கோரி நித்யானந்தா, தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா 2012 ஏப். 22-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். நித்யானந்தா நியமனத்துக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. .

இந்நிலையில், ஆதீன மடத்தின் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க அருணகிரிநாதருக்கு உத்தரவிடக் கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்கவும், ஆதீன மட நிர்வாகத்தை கவனிக்க அருணகிரிநாதருக்கு தடை விதிக்கவும் கோரி இரு துணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்கக் கோரிய மனு 2013 பிப். 26-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைவதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்யானந்தா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி வி.எம்.வேலுமணி செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு: ஒருவரை மடாதிபதியாக நியமனம் செய்வதற்கு சில தகுதிகள், நிபந்தனைகள் உள்ளன. அவை எதையும் நித்யானந்தா பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில், ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வந்ததால், நித்யானந்தா நீக்கப்பட்டதாக அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார். நித்யானந்தா நியமனம் தொடர்பான பதிவுகள் ரத்து செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் நித்யானந்தாவுக்கு பதிவு தபாலில் அனுப்பப்பட்டு, அதை அவர் பெற்றதற்கான அத்தாட்சியும் உள்ளது. இந்த அடிப்படையில்தான் மடத்துக்குள் நித்யானந்தா நுழைவதற்கு கீழ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் 293-வது ஆதீனமாகப் பணிபுரிய தனக்கு முழு தகுதிகளும் இருப்பதாக நித்யானந்தா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகே நித்யானந்தாவுக்கு கீழ் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. எனவே, நித்யானந்தா மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT