சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் அருகே கல்லூரி மாண வியை பள்ளி மாணவர்கள் கேலி செய்துள்ளனர். இதில் கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் மாணவியின் தாயார் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மறவமங்கலம் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த தொழிலாளி போஸ் (50). இவர் காங்கேயத்தில் தங்கி பணியாற்றுகிறார். இவரது மனைவி ரெஜினா (45), மகள் நித்யா (19), மகன் சூர்யா (16) மறவமங்கலத்தில் வசிக்கின்றனர். மாணவி நித்யா காளையார்கோவிலில் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தம்பி சூர்யா உள்ளூரில் 11-ம் வகுப்பு படிக்கிறார்.
உள்ளூரைச் சேர்ந்த ராணியின் மகன்கள் ஹரிபாலாஜி (பிளஸ் 1), சிவபாலாஜி (10-ம் வகுப்பு), விக்னேஷ் (9-ம் வகுப்பு) ஆகியோர், மாணவி நித்யா கல்லூரி செல்லும்போது பஸ் நிறுத்தத்தில் அமர்ந்துகொண்டு கேலி செய்ததாகத் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்குச் சென்றபோது, அந்த 3 பேரும் தரக்குறைவாகப் பேசினராம். இதனை தாயார் ரெஜினாவிடம் அவர் தெரிவித்துள்ளார். தன் மகளை கேலி செய்தவர்களின் தாயார் ராணியின் வீட்டுக்குச் சென்று கண்டித்துள்ளார் ரெஜினா.
இதில், ஆத்திரமடைந்த ராணி தரப்பினர் சுமார் 8 பேர் சேர்ந்து, ரெஜினா மற்றும் நித்யா, சூர்யா ஆகியோரை உருட்டைக் கட்டையால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த ரெஜினா சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காளையார்கோவில் போலீஸில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால், புதன்கிழமை மாலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் மு.கந்தசாமி, மாணவர் சூர்யா, மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலர் திருநாவுக்கரசு, எஸ்.எப்.ஐ. மாவட்டச் செயலர் சுரேஷ் ஆகியோர் ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை டிஎஸ்பி மோகன்ராஜ் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இதில், வன்கொடுமை மற்றும் ஈவ் டீசிங் தடுப்பு பிரிவில் வழக்கு பதிய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க வேண்டும். தனித்த வீடாக உள்ள அந்த மாணவியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் முகமதுநசீர் கூறுகையில், மாணவர்களுக்குள் சண்டை என செவ்வாய்க்கிழமை இரவு வந்தனர். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவும், காலையில் வரச்சொல்லி அனுப்பி வைத்தோம். மருத்துவமனைக்கு சென்று புகார் வாங்கினோம். இது தொடர்பாக டி.எஸ்.பி. ஆலோசனையின்பேரில் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.