தமிழகம்

மாநகரப் பேருந்து டயரில் தீ : மக்கள் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு

செய்திப்பிரிவு

எழும்பூரில் மாநகரப் பேருந்து டயரில் திடீரென தீப்பிடித்தது. பள்ளி மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் சாதுர்யமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்து வில்லிவாக்கம் நோக்கி மாநகரப் பேருந்து (தடம் எண் 27 டி) வெள்ளிக்கிழமை காலை சென்றது. எழும்பூர் நீதிமன்றம் அருகே உள்ள நிறுத்தத்தில் நின்றபோது, பேருந்தில் இருந்து திடீரென புகை வந்தது. அங்கிருந்தவர்கள் பார்த்து ஓட்டுநரிடம் தெரிவித்தனர்.

அவர் உடனே இறங்கி வந்து பார்த்தார். பின்பக்க டயர் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது. டீசல் டேங்கில் தீ பரவும் அபாயம் இருந்ததால், பள்ளிக்கூட வாசலில் இருந்து சற்று தொலைவில் பேருந்தை நிறுத் தினார். பயணிகள் அனைவரும் அவசரமாக இறங்கினர்.

தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில்தான் தீயணைப்பு நிலையம் உள்ளது. ஆனாலும், வீரர்கள் யாரும் வரவில்லை. எழும்பூர் ரவுண்டானாவில் பணியில் நின்ற போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் மாறி மாறி யாருக்கோ செல்போனில் பேசினர். டயரில் இருந்து புகை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. இதையடுத்து, அங்கிருந்த பெற்றோர், பொதுமக்கள் சிலர் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தின் தண்ணீர் குழாயை இழுந்து வந்து, டயரில் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். தீயணைப்பு வீரர்கள், போலீஸை எதிர்பார்க்காமல் நிலைமையை அவர்களே சாதுர்யமாக சமாளித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

SCROLL FOR NEXT