தமிழகம்

கர்ப்பிணிகள் உட்கார்ந்து பணி செய்ய தனி இருக்கை வசதி வேண்டும்: கோயில் தொழிலாளர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கம் சென்னை கோட்டத்தின் எழும்பூர் - திரு.வி.க. நகர் கிளையின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் சூளை கந்தன் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு கிளை கவுரவத் தலைவர் ஜனார்த்தனம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சென்னை கோட்டத் தலைவர் எஸ்.தனசேகர், செயலாளர் ரா.ரமேஷ், கொள்கை பரப்பு செயலாளர் க.வெங்கடேசன், பொருளாளர் து.தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டு கிளையின் செயல்பாடுகள், சங்கத்தின் வளர்ச்சி பணிகள், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து நிர்வாகிகளிடையே ஆலோசனை மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில், கோயில் பணியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக்க வேண்டும், அரசு பணியாளர்கள் போன்று கோயிலில் உழைக்கும் தற்காலிக தொகுப்பூதிய பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தர வேண்டும், கர்ப்பிணிகளுக்கு அலுவலகத்தில் வசதியாக உட்கார்ந்து பணிகளை கவனிக்க தனி இருக்கைகளும், குடிநீர் வசதி மற்றும் கைப்பிடி வசதி முறையாக செய்து தர வேண்டும்.

பெண் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரம் வேண்டும், கோயிலில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து வரும் தற்காலிக தொகுப்பு புதிய மற்றும் அன்னதான பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT