சென்னை: பூலித்தேவனின் 309-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிதலைவர்கள் வாழ்த்து தெரிவித்து,அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: ஈடு இணையற்ற வீரம், ஒருமைப்பாடு மற்றும் அசைக்க முடியாத உறுதியின் உருவகமான பூலித்தேவரின்துணிச்சல் மிகு தலைமை, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்க்க வைத்தது மட்டுமின்றி விடுதலைக்கான இடைவிடாத போராட்டத்தில் தலைமுறைகளை ஒன்றிணைக்கவும் தூண்டியது. அவருக்கு இந்த தேசம் மரியாதை செலுத்துகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆங்கிலேய ஆட்சியை வேரறக்களைய போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவனின் பிறந்தநாள். மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த அவரது வரலாற்றை தமிழ் நிலம் எந்நாளும் போற்றும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு, தமிழகத்தில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் விடுதலை உணர்வை ஏற்படுத்திய மாமன்னர் பூலித்தேவனின் வீரத்தை போற்றி வணங்குகிறேன்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் பூலித்தேவனின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும்,தியாகத்தையும் போற்றி வணங்குவோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ்தமிழ் நிலம் அடிமைப்பட்டு கிடந்தபோது, அதன் விடுதலைக்கு கிளர்ந்தெழுந்து, பீரங்கி குண்டுகளால் கூட துளைக்க முடியாத கோட்டையைகட்டி ஆண்ட பேரரசன் பூலித்தேவனின் வீரத்தை போற்றுகிறேன்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான விடுதலைப் போரில் தென்னாட்டில் இருந்து போர்க்கொடி உயர்த்தியவர்களில் முதன்மையானவர் பூலித்தேவன். போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராக வலம்வந்த மாவீரர் பூலித்தேவனின் வீரத்தையும் துணிச்சலையும் இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவல் கிராமத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராணி ஸ்ரீகுமார்எம்.பி., அம்மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் ஆகியோரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை செலுத்தினர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பூலித்தேவனின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.